சிறுவர் கதை
கோகிலா மகேந்திரன்
மாலுவின் கால்கள் குளிரத் தொடங்கிய போது தான் பிரச்சினையே உருவாயிற்று. அவர் பெயர் மாலத.p “மாலு” என்று வீட்டிலே செல்லமாக அழைப்பார்கள். இரவு படுக்கப் போகும் நேரத்தில் மாலு சிணுங்க ஆரம்பித்தாள.; அப்பா இன்னும் வேலையில் இருந்து வீட்டுக்கு வரவில்லை. இரவு ஒன்பது மணியாகிறது.
“நான் இன்று நித்திரை கொள்ள மாட்டேன் எனக்குக் கால் குளிருது” கோபத்துடன் கத்தினாள் மாலு.
“நேரத்திற்குப் படுக்க வேணும்” அம்மாவும் விடுவதாக இல்லை. “எனக்குக் கால் குளிருது” அடம்பிடித்தாள் மாலு.
அம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆறுதலாக ஒரு கொட்டாவி விட்டுக் கொண்டாள்.
“உடம்பைச் சுருட்டிக் கொண்டு படு நான் காலை உருவி விடுகிறன் கம்பளிப் போர்வையால போத்து விடுறன்.”
அம்மா தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள். அப்படியே செய்து விட்டு அம்மா தன் பாட்டில் நித்திரையாகிப் போனாள். வெளியே கார்த்திகை மழை பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தது. மாலுவும் கண்ணை மூடினாள். நித்திரை வரவில்லை.
மாலுவின் விளையாட்டுப் பொம்மைகள் மகள் நிலைமையைக் கண்டு கவலை அடைந்தன.
“நாங்கள் மாலுவை எங்களோடை கூட்டிக் கொண்டு போவம் அவளின் கைகால் குளிர் மாற ஏதாவது செய்வம்” என்று பொம்மை முயலிடம் கூறியது பொம்மை யானை.
பொம்மை முயல் மாலுவின் படுக்கையில் துள்ளி ஏறி மாலுவின் கையைப் பிடித்து உலுப்பியது. அவள் கண்களைத் திறந்து பார்த்தாள்.
“என்ன வேணும் முயல் குட்டி” என்று கேட்டாள். “எனக்கு ஒண்டும் வேண்டாம் நீ எங்களோட வா நாங்கள் உன்ர கால் குளிர் மாறப் பண்ணுவம்” என்று கூறிக் காதை ஆட்டியது முயல்.
மாலு படுக்கையை விட்டுக் குதித்தாள்.
“நான் வேற நல்ல உடுப்புப் போட வேணுமா? அம்மாவுக்குச் சொல்ல வேணுமா?” என்று கேட்டாள்.
“ஒண்டும் வேண்டாம.; உன்ரை உடுப்பு அழகாகத்தானே இருக்கு. நீ இப்பிடியே வா. அம்மா எழும்ப முதல் நாங்கள் உன்னைக் கொண்டந்து விட்டிடுவம்” என்றது முயல்.
முயலின் தலைமையில் பயணம் ஆரம்பம் ஆனது. இராணுவ வீரனின் உடுப்புப் போட்ட பொம்மை, யானை பொம்மை, ரெடி பெயர் “சீனு” என்று மாலுவால் அழைக்கப்படும். பொம்மை, பிள்ளை பொம்மை, மணியடிக்கும் குரங்குப் பொம்மை மாலுவுடன் புறப்பட்டனர்.
விரைவாக நடந்து ஒரு சிறு கதவடிக்கு வந்து சேர்ந்தனர். யுhனைப் பொம்மை கதவைத் தட்டிய போது சிரித்துக் கொண்டு ஒரு தேவதை கதவைத் திறந்தது. தேவதை போட்டிருந்த அழகான நிலம் கூட்டும் நீல நிறச்சட்டையில் மேல் இருந்து கீழாகப் பவுண் தெறிகள் போடப்பட்டிருந்தன. தேவதையின் அழகான நடையைப் பின்தொடர்ந்து அனைவரும் பெரிய அழகான மண்டபத்தினுள் நுழைந்தனர்.
மாலுவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அறையைச் சுற்றி ஆயிரக் கணக்கான விளையாட்டுப் பொம்மைகள் அடுக்கப்பட்டு இருந்தன. “இதெல்லாம் யாருக்கு?” என்று விரிந்த கண்களுடன் கேட்டாள் மாலு.
“ஒரு விளையாட்டுப் பொம்மையும் வாங்க வசதியில்லாத பிள்ளைக்கு யார் கொடுத்தது என்று தெரியாமையே கொடுங்க…” என்று தேவதை கண்சிமிட்டியபடி பதில் அளித்தது.
“யார் கொடுத்தது என்று தெரியாமல் எப்படி இங்க வந்தது? மாலு விடாப்பிடியாகக் கேட்டாள்.
“நல்ல உள்ளம் படைத்த பெரிய மனிதர்கள் எங்களுக்குப் பார்சல் மூலம் அனுப்புவார்கள். யார் அனுப்புவது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்களும் குழந்தைகளுக்குப் பார்சல் மூலம் அனுப்புவோம்.”
என்று கூறத்p தன் தோகையை விரித்தது தேவதை.
“ தேவதை பறக்கப் போகிறதே?” என்று மாலு நினைக்க முதலே மீண்டும் தோகையை மடித்து விட்டு
“ சரி இப்போது நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் “ என்று கேட்டபடி மாலதிக்கு அருகில் வந்தது. தேவதையின் உடலில் வீசிய நறுமணம் அவளைக் கிறங்க வைத்தது.
“என்னட்டை நிறையப் பொம்மை இருக்கு” “நான் ஏழைப்பிள்ளை இல்லை” என்று உண்மை கூறினாள் மாலு.
“நீ அரிச்சந்திரன் போல இருக்கிறாய் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு” என்று கூறிய தேவதை தொடர்ந்தது.
“ உன்னட்ட அளவுக்கு அதிகமாய் பொம்மை இருந்தால் அதில ஒண்டிரண்டை எங்களுக்குத் தரலாம்” என்றது.
“தருவேனே! என்று முறுவலித்தாள் குழந்தை.
“ சரி நீ நல்ல பிள்ளை. இப்போது நீ இங்கே உள்ள பொம்மைகளோடு விளையாடலாம்”; என்றது தேவதை.
முன் பக்கம் பூனையின் முகம் கீறப்பட்ட மெத்தென்றிருந்த சப்பாத்துச்சோடி ஒன்றை எடுத்து தன் காலை அதற்குள் நுழைத்தாள் மாலு . அவளுடைய கால் சப்பாத்தை விடச் சிறிதாக இருந்ததால் நடக்க முடியவில்லை. கால் குளிராக வேறு இருந்தது. அதைக் கழற்றிவிட்டு ஒரு சோடி தவளைப் பொம்மைக்கு அருகில் போனாள். பச்சைப் பிளாஸ்ரிக்கால் செய்யப்பட்டிருந்த தவளைக்கு ஒரு பக்கத்தில் சாவி இருந்தது. சாவியை முறுக்கி விட்டாள். அவை மாலுவின் பாதங்களில் ஏறிக் குதித்து விளையாடின.
“நல்லா இருக்கு” மாலு மலர்ந்தாள். கால்கள் கொஞ்சம் வெப்பமாகிய உணர்வு ஏற்பட்டது. தவளைகள் குதிப்பதை நிறுத்தியவுடன் கால்கள் மீண்டும் குளிர்ந்து கொண்டன.
உடல் முழுவதும் நிறைய இறகுகளைக் கொண்டிருந்த குயில் பொம்மைக்கு அருகில் போனாள். அது தனது இறகுகளால் மாலுவின் கால்களை வருடித் தேய்த்து விட்டது. சிறிது நேரம் நன்றாக இருந்தது. திரும்பவும் கால் குளிர்ந்து விட்டது.
“என்னுடைய நடனத்தைப் பார் மாலு.” என்று சொல்லி ஒரு தஞ்சாவூர்ப் பொம்மை ஆடத் தொடங்கியது. தன்னை மறந்து அந்த நடனத்தைப் பார்த்தபடி இருந்தாள் மாலு. அவளுக்குத் தெரியாமலே கால்கள் சூடேறிவிட்டன.
“கால்கள் குளிரேயிலை” என்று சொல்லிக் கொண்டு கீழே பார்த்த போது ஒரு ஒட்டகப் பொம்மை அவளின் கால்களுக்கு மேல் படுத்துக் கிடந்தது.
“உனக்கு முதுகிலை ஒரு “சிப்” இருக்கு என்னத்துக்கு?” என்று கேட்டாள் மாலு.
“பொதி சுமக்க” என்ற அழுதது பொம்மை. பிறகு “ நான் பாலை வனத்தில் இருக்கிற ஆள். எப்பவும் சூடா இருப்பன். பாலை வனத்திலை நீர் கிடைக்காது. கானல் நீர் தான் தெரியும் என்று சொல்லுவினம். ஆனால் நான் உனக்குத் தந்த வெப்பம் கானல் நீரா மறைந்திடாது” என்று கூறிப் பல்லைக் காட்டியது.
சற்று நேரத்தில் மாலுவின் கால்களிலேயே நித்திரையாகிப் போய் விட்டது.
“உனக்கு இந்த ஒட்டகத்தைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டது தேவதை.
“ஓ” என்று சிரித்த மாலு தனது கால்களில் குளிர் போய் விட்டதை உணர்ந்தாள்.
“காலையில் எழும்பின உடன ஊத்தை உடுப்புக்களை எல்லாம் ஒட்டகத்தின்ரை சிப்பை இழுத்து அதுக்குள்ளை போட்டு வைக்கலாம்” என்ற கூறியது தேவதை. “அப்படியா?” என்று கேட்ட மாலு,
“நான் என்ர இராணவ வீரன் பொம்மையையும், ரெடிபெயரையும் உங்களுக்குத் தரப் போறன். பொம்மை இல்லாத பிள்ளைகளுக்குப் பார்சலிலை அனுப்புங்கோ” என்று முடித்தாள்.
நன்றியும் வணக்கமும் கூறி விட்டுத் தன் அணியுடன் புறப்பட்டாள் மாலு. முயல் பொம்மையின் தலைமையில் யானையும் குரங்கும் , சீனுவும் மாலுவுக்குத் துணையாக வந்தனர். விடிய முதலே எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்து விட்டனர். மாலு தன் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டாள். அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை.
சில நாட்களின் பின் மாலுவுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ஒரு ஒட்டகப் பொம்மை முதுகில் “சிப்”புடன் இருந்தது. மாலுவுக்கு இனிக்கால் குளிராதே!
(இந்தக் கதையைப் படிக்கும் பிள்ளைகள் கானல்நீர் என்பது என்ன என்பது பற்றியும் அரிச்சந்திரன் யார் என்பது பற்றியும் ஆசிரியரிடம் அறியலாம்.)
தமிழ்முற்றம் டிசம்பர் 2014