திடீரென !
”போய் வருகிறேன் ” என்கிறார் பேராசிரியர் .
திகைத்துப் போகிறோம் நாங்கள் ,
”மறுபடி வருவீர்களா ?
களத்தின் காவலராய் இருந்தீர்கள் ,
கனமான ஆலோசனை தந்தீர்கள் ,
கருத்திலே கவனமாய் நின்றீர்கள் ,
மறுபடி வருவீர்கள் தானே !”
மலை போன்ற எதிர்பார்ப்பில் நாங்கள் !
”மறுபடியுமா ?நானெப்படி மறுபடியும் வரமுடியும்?”
சிரிக்கிறார் அவர் !அதே சிரிப்பு !
தமிழ் கற்பிக்கும் போது வருகிற அதே
தனித்துவமான சிரிப்பு !
தமிழ் விழாக்களுக்குத் தலைமை தாங்க ?”
இறுதி வேண்டுதலாய் ,
ஈனஸ்வரத்தில் எமது
குரல் !
”நான் நானாக வரவேண்டும் என்பதில்லையே !
எனக்குப் பதிலாக இன்னொரு பூ
நான் உதிர்ந்த இடத்தில் இன்னொரு மலர் ,
எனது நினைவுகள் ஜனித்துக் கொண்டே இருக்கட்டும்
நினைவுகள் நிரந்தரமானவை –!”
மீண்டும் அதே சிரிப்பு !
தாங்க முடியவில்லை !
குமுறலைத் தாங்க முடியாமல்
கொட்டத் தொடங்குகிறோம் !
வேண்டாம் ,வாருங்கள் ,போக வேண்டாம் !”
”இறைவனைப் பார்த்துப் பேசி விட்டு வருகிறேன் ”
போகிறார் அவர் .
இறைவன் அவரை ஆசீர்வதிப்பார் ,
அதிலென்ன சந்தேகம் ?
நாங்கள் தான் பாவம் .
( 28.01.1989.கலை இலக்கியக் களக் காப்பாளர் பேராசிரியர் .சு .வித்தியானந்தன் அவர்கள் மறைந்தபோது )