பழங்கள்
உலகத்தில் எத்தனை வகையான பழங்களை மனிதர்கள் உண்ணுகிறார்கள் ?தெரியாது .ஆனாலும் எனது மனதில் மிகப் பசுமையாக இருப்பது நாலு வயதில் குடிக்கும் அந்த த் தோடம்பழச் சாறு .அப்போது முன்பள்ளி என்று ஒன்று இல்லை .பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு முதல்” அரி வரி ”என்று ஒன்று இருந்தது .எங்கள் வீட்டில் இருந்து ஒரு ஐந்து நிமிட நடை தூரத்திற்குள் பன்னாலை ப் பள்ளிக்கூடம் .(முன்னைய விழிசிட்டி சிவஞான வித்தியாசாலை .)அநேகமாக இத்தா (அம்மம்மா )தான் என்னை க் காலையில் பாடசாலைக்கு க் கூட்டி ச் செல்வது .நாங்கள் பெரிய மாமா வீட்டடிக்கு வரும்போது ,பரமேஸ்வரன் தனது அக்காமாருடன் பாடசாலைக்குப் போகாமல் எனக்காகப் பார்த்துக் கொண்டு நிற்பான் .அவனுக்கும் எனக்கும் ஒரே வயது .நல்ல விளையாட்டுத் தோழர்கள் .இத்தாவுடன் அவனும் நானும் ஓடி ,ஓடிப் பாடசாலைக்குப் போய் ப் புத்தகப் பையை எறிந்துவிட்டு, பாடசாலை முழுவதும் ஓடித் திரிந்து விளையாடுவோம்.வகுப்பாசிரியர் சண்முகநாதன் வாத்தியார் மிக நல்ல மனுஷன் .ஓடி விளையாடுவதற்குத் தண்டிக்க மாட்டார் .அதிபராக இருந்த பண்டிதர் .வே .சங்கரப்பிள்ளை எமது உறவினர் .அவருக்கும் நாங்கள் செல்லம்தான் .நாங்கள் படிக்கிறோமா என்பது பற்றி யாரும் கவலைப் பட்டதாக நினைவில்லை .அதிபர் அறைக்குள்ளும் ஓடிப் பிடித்து விளையாடுவோம் .(அந்த அறை இப்போதும் இருக்கிறது ).மேற்பார்வை முடித்து அலுவலகம் வரும் அதிபர் என்னைக் கண்டால்
”பரமேஸ்வரன் அலுமாரிக்குப் பின்னால் ஒழித்திருப்பான் .கண்டுபிடி ”என்று சிரிப்பார் .
இடை வேளை மணி அடித்தால் ,விளையாட்டை விட்டு விட்டு சாத்திரியார் வீட்டடி ப் புளியடிக்கு வருவோம் .அங்கு இத்தா தோடம்பழத் தண்ணீர் ப் போத்தலுடன் காத்திருப்பா .படித்துக் களைத்த பிள்ளைக்கு என்று அம்மா கொடுத்து விடுவது .ஓடிக் களைத்த இருவரும்” மடக், மடக் ”என்று குடித்துவிட்டு த் திரும்பவும் ஓட்ட ந்தான் .அந்தப் பழத்தின் இனிமை இன்றுவரை வேறு எந்தப் பழத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை .இப்போது எனக்குத் தோடம்பழம் விருப்பமில்லை.அதன் சித்திரிக் அமிலம் வயிற்றில் குழப்பம் ஏற்படுத்தும் என்று எண்ணம்.
இங்கு அவுஸ்திரேலியாவில் ஸ்ட்ரோபெரி என்றும் ரொக்மெ ல ன் என்றும் அவகாடோ என்றும் புதிய புதிய பழங்கள் கிடைக்கும் .காலை உணவு சீரியல் என்றால் ஸ்ட்ரோபெரி சேர்ந்து கொள்ளும் .றோ க்மெலன் பார்வைக்குப் பூசினிக்காய் போல இருந்தாலும் அதைவிட ச் சுவையானது .வெப்பநிலை 35c ,40c என்று உயருகிற தை மாசி மாதங்களில் நீர் நிறைந்த வாட்டர் மெலன் நன்றாக இருக்கும்.
பழங்கள் சாப்பிடுவது தொடர்பான பரிசோதனை முயற்சிகள் பிள்ளைப் பருவத்தில் ஆரம்பித்துவிட்டது .அகப்பட்ட பழங்கள் எல்லாம் சாப்பிட்டுப் பார்ப்பதில் எனக்கு நல்ல தோழி எனப்படுபவர் கிழக்கு வீட்டு த் தேவி.அவர் பாடசாலை போய் வரும் வழிகளில் கண்ட செடி ,கொடிப் பழங்கள் எல்லாம் சாப்பிட்டுப் பார்த்து ருசியானவற்றை எனக்குச் சிபாரிசு செய்வார் .நல்ல காலம் -நஞ்சுப் பழம் ஏதும் சாப்பிட்டு உயிர் ஆபத்தை த் தேடிக்கொள்ளவில்லை .(பிற்காலத்தில் தேவிஓரிரு முறை தற்கொலை முயற்சி செய்தது வேறு விடயம் .1995 இல் இடம் பெயர்ந்து போன தேவி திரும்பி வரவில்லை .)ஐந்தாம் வகுப்புக்கு தேவியும் நானும் மஹாஜனாவுக்கு அநுமதி பெற்ற பிறகு வழி தெருவில் நாங்கள் அனுபவித்த இலந்தை ,புளி ,மா -அது ஒரு தனீ சுகம் .புளிய மரத்தில் காயும் இல்லாமல் பழமும் இல்லாமல் இடைப் பருவத்தில் இருக்கும் ‘செங்காய் ‘அதன் சுவையே தனி !
உங்களுக்கு ப்பீநாறிச் செடி தெரியுமா ?எங்கள் ஊரில் செம்மஞ்சள் பூ ,பூக்கும் இது பற்றை பற்றையாக வேலிகளில் நிற்கும் .அதன் சிறிய கறுப்புப் பழம் மிக இனிமையானது .அவுஸ்திரேலியாவில் ஊதாப் பூ ,பூக்கும் பீநாறியை அல்பிரட் ரோட் ,ஹோம்புஷ் ரோட் சந்திக்கும் மூலையில் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது .ஆனால் அது நிலத்தோடு வளர்ந்திருந்தது .பழம் இருந்ததா தெரியவில்லை .இருந்திருந்தாலும் சாப்பிட்டிருக்க மாட்டேன் .
சுட்ட பழம் வேண்டுமா ,சுடாத பழம் வேண்டுமா என்பதை ஞாபகப் படுத்தும் நாவல் பழங்கள் எமது விழிசிட்டி வீட்டில் இருந்தன .எமது வீட்டின் தெற்கு எல்லையில் அந்தப் பெரிய நாவல் நின்றது .நாவல் பழங்களை ப் பொறுக்குவதற்கு ஊரிலுள்ள பெடி ,பெட் டை ,எல்லாமே கேட்டுக் கேள்வியின்றி முற்றத்திற்கு வந்துவிடும் .வந்தவர்கள் பத்திரிப்பை ப் பிடித்துக் கொண்டு மசுந்தி ,மசுந்தி நிற்பார்கள் .”சரி ,சரி கெதியா நாவல்ப் பழத்தைப் பொறுக்கிக் கொண்டு போங்கோ ”என்ற அம்மாவின் உத்தரவிற்குப் பணிந்து ஓடி ,ஓடிப் பொறுக்கி ச் சாரத்துக்குள் அல்லது சட் டைக்குள் போட்டு மடித்துக் கட்டிக் கொண்டு ஓடி விடுவார்கள் .நாங்கள் சிலவேளை தேவியின் தமையன் சத்தியமூர்த்தியை மரத்தில் ஏற்றி (அவன் முருகனாக இல்லா விட் டால் என்ன )அவன் பிடுங்கிப் போடும் புதிய பழங்களை ச் சாப்பிடுவதுண்டு .
ஆசையம்மா வீட்டின் வடக்கு எல்லையில் ஒரு விளா மரம்..புளி குறைந்த இனிப்பு மரம் .ஆசையம்மா ஒவ்வொரு நாளும் காலை ,மாலை இரண்டு முறை வீட்டுக்கு வருவா .விளாம்பழங்களும் வரும் .தேவையான நேரம் ,நிலத்தில் அடித்து ,உடைத்து ,சர்க்கரை போட்டுக் குழைத்து (நிலத்தில் அடித்து உடைப்பது பட்டிக்காட்டுப் பழக்கமா ?)விறாண்டி ,விறாண்டிச் சாப்பிடுவது ஒரு மகிழ்வு .
சனி ,ஞாயிறில் இத்தா விடியப்புறம் நாலு மணிக்கு எழும்பி கீரிமலைக்கு அண்மையில் இருக்கும் எங்கள் அந்திரானை புதுக் காட்டுப் பக்க ம் நடந்து போய் வருவா .கக்கத்தில் ஒரு பெரிய கடகம் .கடகத்தில் ஒரு கத்தி .கத்தி கழுத்தை நறுக்க ஒருபோதும் பயன் பட்டிருக்காது .ஏனென்றால் நாங்கள் சைவ உணவுக்காரர் இத்தா வந்தவுடன் கடகத்தை ஆராய்ந்தால் அதில் ஈச்சம்பழக்குலை இருக்கும் .பனம்பழங்கள் இருக்கும் .நிறையப் புலக்காணியில் பறித்து வந்த அன்னமுன்னா ப் பழங்களும் இருக்கும் சிவப்பு நிற ஈச்சங்குலையில் பழுத்திருக்கும் கறுப்புப் பழங்களை ச் சாப்பிட்டுவிட்டு க் குலையை மூன்றாம் அறையில் வைத்தால் பழுக்கப் பழுக்கச் சாப்பிடலாம்
பனங்கிழங்கின் தோலை உரித்து ,முன்னரே தயாரித்து வைத்திருக்கும் காடியில் ஊற வைத்து இத்தா தந்தால் ,அதைச் சூப்பி ச் சூப்பிச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் .பின்னாளில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில்,யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்களை ”பனங்கொட் டை சூப்பிகள் ”என்று கேலி செய்வதை அவதானித்தபோது ,அந்த ருசி இவர்களுக்குத் தெரியாது என்று நினைத்திருக்கிறேன் .
எங்கள் விழிசிட்டி வீட்டின் கிழக்குப் புறமாக ஒரு செம்பாட்டு மாவும் ,மேற்குப் புறமாக ஒரு புளி மாவும் ,இரண்டு பலா மரங்களும் இருந்தன .செம்பாட்டு மா மரத்தில் பழங்கள் கனியத் தொடங்கினால் அப்பா மாங்காய் ஆயும் கொழு க்கியுடன் மரத்தில் ஏறி விடுவார் .கொழுக்கியால் கொப்பை வளைத்து ,பட் டையில் மாங்காயை ஆய்ந்து அவர் கீழே போட ப் பழங்களை நிலத்தில் விழுந்து விடாமல் சாக்கில் ஏந்தி ,ஏந்தி க் கடகத்தில் போடுவது நல்ல உடற் பயிற்சி .நான் அதனை மகிழ்வுடன் செய்வேன் .எங்கள் வீட்டுப் பலா மிகவும் ருசியானது .பழத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பலர் அம்மாவுடன் விசேட தொடர்பு கொள்வர் .அப்பா இடை இடை மரத்தில் ஏறி எந்தப் பழமாவது பழுத்து விட்டதா என்பதைச் சுண்டிப் பார்த்து அறிந்து கொள்வார் .கவனிக்காது விட் டால் காகமும் அணிலும் டயாக்னோஸ் பண்ணி விடுமே !பிறகு ஓரிரு பலா க் கொட் டைகள் நிலத்தில் விழுந்திருப்பதைக் கண்டுதான் அப்பா பட் டையும் வடக்கயிறும் கத்தியும் கொண்டு மரத்தில் ஏறுவார் .கயிற்றினால் பலாப்பழக் காம்பைக் கட்டி மிகுதிக் கயிற்றைக் கீழே எறிவார் .கீழே நிற்கும் ஒருவர் அந்தக் கயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும் .அப்போதுதான் பழத்தை வெட்டியவுடன் அது வேகமாகக் கீழே விழுந்து விடாமல் மெதுவாகக் கீழே இறக்கலாம் .கயிறு பிடிக்கும் தொழில் எனக்குத்தான் .அம்மா பலாப்பழத்தை அரிவாளில் வெட்டிச் சுளை பிடுங்கும் போது முதல் சுளையும் எனக்குத்தான்
பலாக்காய்ப் பிட்டு உங்களுக்குத் தெரியுமா ?முற்றிய பலாக்காயை ச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி ,ஒடியல் மாவும் தேங்காயும் போட்டுக் கலந்து அவிக்கும் பிட்டு .எனக்கு மிகவும் பிடித்த உணவு .அம்மா இறந்த பிறகு மிக அருமையாக ச் சின்னம்மா அல்லது ஆசையம்மா அவித்த பலாக்காய்ப் பிட்டை ஓரிரு தடவை சாப்பிட்டிருப்பேன் .2006 இல் கொழும்புக்கு இடம்பெயர்ந்த பிறகு யார் பலாக்காய்ப் பிட்டைக் கண்டது ?
பேராதனையிலும் கொழும்பிலும் வாழ்ந்த காலங்களில் ”டுரியங் ” என்றும்” பட் டர் புருட் ”என்றும் ஓரிரு நாள் சாப்பிட்டிருக்கலாம் .உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் யாழ்ப்பாணத்தின் கறுத்தக் கொழும்பான் போல வருமா ?
கீரிமலைத் திருவிழாவுக்காக அம்மா வாழைக்குலை பழுக்கப் போடுவது ஒரு தனி வரலாறு .திருவிழா மாசியில் வருமென்றால் தைப் பொங்கலுடனேயே உளவு வேலை ஆரம்பமாகிவிடும் .கதலி ,கப்பல் ,பச்சைநாடான் ,செவ்வாழை ,கருவாழை ,மருத்துவ வாழை ,ஆனைவாழை ,பண்டிவாழை எல்லாம் எந்த எந்த வீடுகளில் இருக்கிறது என்று உளவு பார்க்கும் பணி ஆசையம்மாவிடம் ஒப்படைக்கப்படும் .விலை பேசி முடிக்கும் பணியிலும் அவர்தான் கெட்டி .குலைகள் எல்லாம் சீப்புச் சீப்பாக வெட்ட ப்பட்டு எமது முற்றத்து வெயிலில் ஒருநாள் விடப்படும் .சீப்பு வெட்டும் வேலை அம்மா,அப்பா ,சின்னம்மா ,இத்தா எல்லாரும் செய்வார்கள் .நான் கத்தி தூக்க அம்மா விடமாட் டா.வளவில் வாழைப்பழம் பழுக்கப் போடும் கிடங்கு வெட்டுதல் அடுத்த கட் டப் பணி .சின்னவனுக்கு வசதியான ஒரு நாளில் அம்மா அதைச் செய்வித்துத் போடுவா .கிடங்கின் உள்ளே வாழை ச் சருகுகள் பரவிச் சீப்புகளை அடுக்குவார்கள் .கிடங்கின் ஒரு மூலையில் துவாரமுள்ள மண் முட்டி பதிக்கப்பட்டு த் துவாரம் தவிர்ந்த மீதி இடம் வாழை மடல் மற்றும் மண் போட்டு மூடப்படும் .மண்ணுக்குள் புதைக்கப்பட்ட வாழை ப் பழத்திற்கு ,முட்டி ஊடாகக் காலை மாலை புகை ஊதப்படும்.நெருப்புத் தணலை முட்டியில் வைத்து அம்மா” ஊ- ஊ ”என்று ஊதுவா .புகை கிடங்கில் வடிவாகப் பரவுகிறதா என்று பார்ப்பது நான் .எதிர்த் திசையில் சிறிது மண்ணை அகற்றி அதற்கூடாகப் புகை வருகிறதா என்று பார்க்க வேண்டும் .”வருது ,வருது ”என்று கைதட்டிக் கத்துவேன் .அது வெற்றியின் அடையாளம் .(கண்காணிப்பும் மேற்பார்வையும் ஐந்து ,ஆறு வயதிலேயே என்னிடம் !)இப்படி மூன்று நாள் முடிய கிடங்கைக் கிளறிப் பழத்தை எடுத்தால் காய் பழமாகி இருக்கும் .பிறகு பஞ்சாமிர்தம் சாப்பிடுவதே பாக்கி !
கோயிலில் மாலைப் பூசை ஆறு மணிக்கு ஆரம்பம் என்றால் அபிஷேகம் ஐந்து மணிக்கு ஆரம்பமாகிவிடும் .பழங்கள் போகும் வண்டில் மாலை மூன்று க்கெல்லாம் வீட்டில் இருந்து புறப்பட்டுவிடும் .நடந்து போகிறவர்கள் நாலு மணிக்குத்தான் மெல்ல அசைவார்கள் .மூன்று மணிக்கு வெளிக்கிடும் வண்டிலில் போவதற்கு அம்மாவோடு ஒரு பாட் டம் அடிபட வேணும் .லேசில் விடமாட் டா .இந்த விடயங்களில் அம்மா வைத்ததே சட் டம் .அப்பா தலையிடமாட் டார் .நான் வண்டிலில் இருந்து விழுந்துவிடுவேன் என்ற பயமாக இருக்கலாம் .ஆசையப்பு தான் பெரும்பாலும் வண்டி ஒட்டி .சிலவேளை வண்டி ஓட வேறு யாரும் கிடைத்தால் என்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆசையப்புவிடம் விடப்பட்டு நான் வண்டிலில் செல்ல அநுமதிக்கப் படுவேன் .வண்டிலில் போனால் பஞ்சாமிர்தம் செய்யப்படுவதைப் பார்க்கலாம் .
உயர் வகுப்பில் மிஸ் கனகசபை தாவரவியல் படிப்பித்த பிறகு ஒரு பழத்தைக் கண்டவுடன் அது என்ன வகைப் பழம் (தனிப்பழமா ,கூட்டுப்பழமா —)என்றெல்லாம் கூட மனம் கண்டு பிடிக்க ப் பார்க்கும் .
சென்ற வாரம் அவுஸ்திரேலியாவில்” புளூ பெரிஸ் ”வாங்கினோம் .பிடித்திருந்தது .என்றாலும் கறுத்தக் கொழும்பானுக்கு எங்கே இணை ?
Dec-2011