நிலவைப் பிடித்து உலகில் நிறுத்தி
உலவ விட்ட முகம்
மலரை எடுத்து மதுவை அகற்றி ப்
பாலில் தோய்த்த அகம்
குயிலைக் கொணர்ந்து சோகம் விரட்டி
கூவ வைத்த குரல்
மயிலை மயக்கி தோகை பார்த்து
மலர்ந்த சின்ன விரல்
கனவில் கலங்கி நனவால் நிரம்பிக்
கலைத்து விரட்டும் விழி
நினைவில் நனைந்து இனிமை குழைத்து
நளினம் மொய்த்த மொழி
அன்னம் பார்த்து வண்ணம் தீட்டி
அழகு பார்த்த நடை
பொன்னை வார்த்து உயிரைக் கொடுத்து ப்
பொலிய விட்ட உடை
வகிடு பிரித்து மலர்கள் சூட்டி
வளர விட்ட சடை
முகிலை ப் பிடித்து எண்ணெய் தேய்த்து
நெளிய விட்ட குழல்
இனிமை நிரப்பி த் தேனில் அமிழ்த்தி
சிவக்க விட்ட இதழ்
எனக்கே சொந்தம் எனவே இறைவன்
படைத்து விட்ட சிலை
மனதால் என்னை மணந்தாள் எனக்கு
மகிழ்வு சேர்க்கும் கலை
17.02.1979 ஈழநாடு