இலையுதிர் காலம்
ஆசிரியை தனது முதலாம் வகுப்புக் குழந்தைகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார் .அது இலையுதிர்கால ஆரம்பம் .அமைதியான காலைப்பொழுது .உயர வானத்தில் பறவைக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது .பறவைகள் மெதுவாகக் கத்தின .இதனால் புல்வெளியில் ஒருவித சோகம் நிலவியது .
ஆசிரியை குழந்தைகளிடம் கேட்டார்:
”இன்று நாம் இலையுதிர் கால வானத்தைப் பற்றியும் குடிபெயரும் பறவைகளைப் பற்றியும் படிக்கப் போகிறோம் .இப்போது வானம் எப்படி உள்ளது ?அழகான தமிழில் சொல்லுங்கள் பார்ப்போம் .–”
குழந்தைகள் அமைதியாக இருந்தனர் .வானத்தைப் பார்த்துச் சிந்தித்தனர் .ஓரிரு நிமிடங்களில் இவ்வாறு கூறினர் .
”வானம் நீல நிறமானது –”
”வானம் வெளிர் நீல நிறமானது –”’
”வானம் இளநீல நிறமானது –”
”வானத்தில் முகில் உண்டு ”
அவ்வளவுதான் !குழந்தைகள் நீலம் ,வெளிர்நீலம் ,இளநீலம் ,முகில் போன்ற சொற்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர் .
நீண்ட கண்களை உடைய அகல்யா ஒருபுறம் அமைதியாக நின்றாள் .
”அகல்யா! நீ என்ன நினைக்கிறாய் ?”
”வானம் மென்மையானது ” மெதுவாகச் சொல்லி ச் சோகப் புன்னகை பூத்தாள் அகல்யா .குழந்தைகள் அமைதியாயினர் .அத்தருணத்தில் அவர்கள் இதுவரை பார்க்காத ஒரு வானத்தைப் பார்த்தனர் .
”வானம் சோகமானது ”
”வானம் கவலையூட்டுவது ”
”வானம் துக்கம் தருவது ”
”வானம் மிக மிகக் குளிரானது ”
வானம் இப்போது உயிருள்ள பொருள் போல் விளையாடியது .ஒலி எழுப்பியது .சுவாசித்தது .குழந்தைகள் அதன் சோகமான நீலநிற இலையுதிர் காலக் கண்களை ப் பார்த்துக்கொண்டிருந்தனர் .
( 1990)