17.11.1950 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.10க்கு சதய நட்சத்திரத்தில் இணுவில் ஆஸ்பத்திரியில் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் நான் பிறந்தேனாம். இது நல்ல நேரமா என்பதை என் வாழ்வின் வெற்றி பற்றி மதிப்பிடக்கூடிய நேர்மையான விமர்சகர்கள் நாலு பேர் சொல்லட்டும். வேறு பல மனிதர்களோடு ஒப்பிடுகையில் நான் நேர்மையான வாழ்வு வாழ்ந்தேன் என்ற திருப்தியுடன் முதுமைக்குள் புகுந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
எனது பிறப்பு எனக்கு நினைவிருக்க முடியாது. ஆகவே இங்கு நான் எழுதுபவற்றில் மூன்று வயதுக்கு முற்பட்ட விடயங்கள் அம்மா பிற்காலத்தில் எனக்குக் கதைகதையாய்ச் சொன்ன செவிவழி ஞாபகக் கதைகள், அப்பாவின் டயரி ஆகியவற்றின் தொகுப்புத்தான்.
கட்டைச் சுப்பருக்கும் (அப்படித்தான் அம்மப்பா ஊரில் அழைக்கப்பட்டார்) சின்னாச்சிப்பிள்ளைக்கும் பிறந்த தன் தம்பி தங்கையரைப் பராமரித்துக்கொண்டு அல்லது பராமரிக்க வைக்கப்பட்ட நிலையில் பதினெட்டு வயதில் திருமணம் செய்த அம்மாவுக்கு நான் பிறந்தபோது வயது முப்பத்தைந்து. ”மலடி ”என்ற நிலையோடு நீண்ட பதினேழு வருடங்கள் போராடி, செயற்கை மருத்துவ உதவி ஒன்றும் இன்றி, இயற்கையாகக் கர்ப்பம் தரித்த அபூர்வம் அம்மாவின் வாழ்வில் நடந்தது உண்மைதான். ”பிள்ளை இல்லை, பிள்ளை இல்லை ” என்று பதற்றப்பட்டு ஓடித்திரிந்து களைத்து, கிட்டத்தட்ட இனிப் பிள்ளை இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சின்னம்மாவைத் தங்கள் பிள்ளையாக ஏற்று வளர்க்கத் தொடங்கி மனம் அமைதியடையப் பிள்ளை இயல்பாக வந்துவிட்டதோ என நான் நினைத்துப் பார்க்கிறேன் (அம்மாவுக்குத் தைரோயிட்டு இருந்திருக்கலாம் ).
கீரிமலையில் இப்போதிருக்கும் நகுலேஸ்வரக் குருக்களின் தந்தையார் குமாரசாமிக்குருக்களின் அறிவுறுத்தலின்படி நூல் கட்டி, அட்ஷரக்கூடு செய்து, மாதாமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு நடந்து போய் அர்ச்சனை செய்த பயன் என்பது அம்மாவின் விளக்கம். அப்பாவுக்கும் அது உடன்பாடு. நான் பிறந்த பிறகும் -இல்லை இல்லை – நாங்கள் விழிசிட்டியை விட்டு இடம் பெயரும் வரையும் – அந்த மாதப் பூசையை அவர்கள் செய்து வந்த முறைமை, அந்த ஆழ்ந்த நம்பிக்கை, அது அற்புதம் நிகழ்த்தியிருக்க வாய்ப்புண்டுதான் (எனக்கு அந்தளவு ஆழமான நம்பிக்கை கடவுள் மீது வரவில்லையே என்று கவலை ). பூசை என்றால் வெறுமனே காசு கொடுத்து முடிக்கிற விடயமில்லை அவர்களுக்கு. முதல் நாளே ஒவ்வொரு வாசலுக்குமான அரிசி, சர்க்கரை, வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் கற்பூரம், விளக்கெண்ணெய், தட்சணைக் காசு, ஊதுபத்தி எல்லாம் எண்ணி அடுக்கி ஓலைக் கடகத்தில் வைத்துவிடுவார்கள். பெரும்பாலும் அம்மாதான் அதைத் தலையில் வைத்துக் காவிக்கொண்டு நடப்பது. சிலவேளை பாரம் கூடினால் அப்பாவின் கைப்பைக்குச் சில பொருள்கள் மாறும்.
1949ஆம் ஆண்டு மார்கழித் திருவாதிரை நாளிலே தான் நடேசர் வாசலில் நின்று, தலைக்குமேல் கைவைத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்தபோது உச்சத்திலே பல்லி சொன்னதாம் – இது அம்மா பலதரம் மீளமீள ஒப்படைத்த சம்பவ விபரிப்பு. உச்சத்துப் பல்லிக்கு அச்சமில்லை என்பதுதான் செய்தியாம். அந்தச் செய்தி சொல்லப்பட்டுச் சில மாதங்களுக்குள்ளேயே தனக்குத் தீட்டு வரவில்லையாம். பிள்ளை தங்கிவிட்டதாம். பல்லிசொற்பலன் கூறுவதில் அம்மா பெரிய பிரபலம். பஞ்சாங்கத்தில் உள்ளதெல்லாம் அவவுக்குப் பாடம். ஊரிலே பலரும் மனக்கஷ்டமான நேரங்களில் பல்லி சொன்னால் பலன் கேட்க அம்மாவிடம் ஓடி வருவார்கள்.
1949 இல் இந்தப்பல்லி சொன்னபடியால் போலும், நாங்கள் -சீ -அவர்கள் வசித்து வந்தமண்வீட்டில் ஒரு சீமெந்து மலசலகூடம் கட்டப்பட்டது. இனி அம்மா பிள்ளைத்தாய்ச்சி ஆகப்போகிறார். சின்னம்மா பெரியபிள்ளை ஆகக்கூடும். அவர்கள் இனியும் பனை வடலிக்குள் போய்வர முடியாது.
தெல்லிப்பழை நகர்ப் பகுதியில் அப்பாவின் பாடசாலைக்கு அருகில் வசித்து வந்த குடும்ப வைத்தியர் சின்னமணியர் (ஆயுர்வேதம் ) அம்மா பிள்ளைத்தாய்ச்சி ஆகியவுடன் அப்பாவின் ஏற்பாட்டில் அடிக்கடி வீட்டிற்கு வந்து பார்த்து மூலிகை மருந்துகள் கொடுத்திருக்கிறார் (இவர் பின்னர் நான் கர்ப்பமாக இருந்தபோதும் மூலிகை மருந்துகள் தந்தார். அம்மாவின் வற்புறுத்தலில் நான் அவற்றை என்னவென்று தெரியாமல் உட்கொண்டேன்). பிள்ளைப் பேறுக்கு முன் அம்மாவுக்குக் குருதி அமுக்கம் உயர்ந்தது என்று நினைக்கிறேன். இணுவில் ஆஸ்பத்திரியில் காட்டியிருக்கிறார்கள். நிறைவாக 15.11.1950 இல் ஆஸ்பத்திரியில் அநுமதித்து அங்கே 18 நாள் தங்கியிருந்து (2.12.50 வரை ) பிள்ளையோடு வீடு வந்திருக்கிறார்கள். ஜான் அம்மா தன்னிடம் சத்திரசிகிச்சைக்குக் கையெழுத்து வாங்கும்போது, தான் சொன்னாவாம் – ‘நான் செத்தாலும் காரியமில்லை, பிள்ளையைக் கவனமா எடுத்து இவரிட்டைக் குடுத்திடுங்கோ’ என்று. இது அம்மாவின் வாக்குமூலம். ஜான் அம்மா என்ற இந்த வைத்தியநிபுணர் தமிழரா என்று தெரியவில்லை. தமிழ் பேசத்தெரிந்தவராக இருந்திருக்கிறார். நான் பிறந்த அதே நாள் பக்கத்து அறையில் வைத்தியநிபுணர் கெங்கம்மா (பிற்காலத்தில் மிகப் புகழ்பெற்ற மகப்பேற்று நிபுணர் ) ஒரு சத்திரசிகிச்சை செய்து தாய் பிள்ளை இருவரும் இறந்துவிட்டார்களாம். கீரிமலைச் சிவபெருமான்தான் எங்கள் இருவரையும் காப்பாற்றியதாம்.
நான் பிறக்கும்போது நாலரை இறாத்தல். (2கிலோ ) அழகான வெள்ளைப் பிள்ளை, கிளிபோல சின்னப்பிள்ளை சுருட்டை முடி என்பது அம்மாவின் விவரிப்பு. நாலு நாள் கண்ணாடிப்பெட்டியிலே வைத்திருந்தார்களாம் (அப்படியானால் முதல் சில நாள் ஒழுங்காகத் தாய்ப்பால் குடித்திருக்க மாட்டேனோ) விட்டேனா பார் என்று நாலு வயதுவரை தாய்ப்பால் குடித்த ஞாபகம் உண்டு.
சின்னக்காவின் இத்தா (அம்மம்மாவின் அக்கா ), ஆசையம்மா இருவரும் ஆஸ்பத்திரியில் தங்கிநின்று சமைத்து அம்மாவுக்கும் கொடுத்துச் சாப்பிட்டார்களாம். வீட்டிலே சமையலுக்கு இத்தாவும் உதவிக்குச் சின்னம்மாவும் இருந்தனர். வேறு உறவினர்களும் தாங்கள் ஆஸ்பத்திரியில் நிற்க விரும்பினார்களாம் (நின்றால் நல்ல சாப்பாடுமாம்) ஆசையம்மா தான் தான் அக்காவுடன் நிற்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று வெற்றியாம் (அம்மாவின் கடைசிக் காலத்திலும் ஆசையம்மா அவவுக்குப் பக்கத்தில் இருந்துகொண்டார் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும் ). அப்படி ஒரு சகோதரி எனக்கு இல்லையே என்று கடும் பொறாமை எனக்கு.
பிள்ளை வீட்டுக்கு வந்தபிறகு கிடுகுக் கொட்டிலில் தான் படுக்கை. பாம்பு பூச்சி பிள்ளைக்குக் கிட்ட வராமல் நாய் (வீமன்?) பார்த்துக்கொள்ளுமாம்.
நான் பிறந்தபோது அப்பாவுக்கு ஐந்நூறு ரூபா செலவாகியிருக்கிறது. இது அவரது பத்து மாதச் சம்பளத்திற்கு மேலே இருக்கும் என்று நினைக்கிறேன்.
வியாழரம்மா (பொற்கலந்தம்பை வைரவர் கோயில் பூசைப் பங்கு கொண்ட கருணாகரர் ஐயாவின் அக்கா ) வந்து பிள்ளையைப் பார்த்துவிட்டு ‘அருந்தவம்’ அல்லது ‘அருந்தவச்செல்வி ‘ என்றுதான் பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னவராம். அதில் அம்மாவுக்கும் உடன்பாடு என்று நினைக்கிறேன். இந்த வியாழரம்மா பிற்காலத்திலும் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து குசினியில் (கல்வீட்டில்) பலகை போட்டிருந்து சமையல் வேலையில் இருக்கும் அம்மாவுடன் கதை பேசுவது எனக்கும் ஞாபகம். சதய நட்சத்திரத்தில் பிறந்த பிள்ளைக்குப் பஞ்சாங்கத்தின்படியும், சாத்திரியார் சொன்னதன்படியும் ‘ கோ ‘ எழுத்தில் தொடங்கும் பெயரே சிறப்பு என்பதால் அப்பா கோகிலாதேவி என்று வைத்தாராம்.
இவ்வளவு செலவுக்குப் பிறகும் பிள்ளை பிறந்த முப்பத்தோராம் நாள் பத்தரைக் கூப்பிட்டுக் காது குத்திப் பொன்னுசி போட்டு முக்கால் பவுண் காப்பும் போட்டிருக்கிறார்கள் எனக்கு! இ வை அப்பாவின் டயரி தரும் செய்திகள்.