உருவகம் – மின்னுவதெல்லாம்

அந்தப் பச்சைப் பசேலென்ற புற்றரையில் ,அழகாக நெடிதுயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் .!மரங்கொத்தி ஒன்று ஒரு தென்னையில் பறந்து வந்து உட்கார்ந்த நேரத்தில் ,பிறந்து மூன்றே நாள் ஆகியிருந்த தவளைக் குஞ்சு ஒன்றும் தனியாக மரத்தடிக்கு உலா வந்தது .தூரத்தில் ஒரு அழகான காட்சியைக் கண்டு அப்படியே பிரமித்துப் போய் உட்கார்ந்து விட்டது தவளைக் குஞ்சு .

”ஆகா ! என்ன மென்மையான பளபளப்பான மேனி !மென் மஞ்சள் நிறத்தில் கரிய புள்ளிகள் !பழைய உடையை -அந்த வெள்ளை நெட் உடையைக் கழற்றி எறிந்து விட்டு ,உள்ளே இருந்த புத்தம் புது ஆடையுடன் அந்தப் பிராணி மெதுவாக அமைதியாக ,வளைந்து ,வளைந்து செல்வது ,பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது !

தோலைக் கழற்றி விட்டு ஊர்ந்து செல்லும் பாம்பைப் பார்த்து விட்ட தவளைக் குஞ்சுக்கு ஒரே உற்சாகம் !அருகில் போய் அதன் தோளில் ஏறி விளையாடினால் என்ன என்று எண்ணுமளவுக்கு ஒரே உற்சாகம் !திடீரென்று ஹி ,ஹி ,ஹிக் ,ஹீக் –ஹீக் என்று ஒரு சத்தம் .பயந்து போய்த் திரும்பிப் பார்த்தது தவளைக் குஞ்சு

முதுகில் மூன்று வாள் !கரிய வாள் வைத்துக் கொண்டு ,சடை போன்ற வாலை உயர்த்தி ,அசைத்து ப் பெரிதாகச் சத்தம் போட்ட படி ஓடிவரும் அந்த அணிலைக் கண்டதும் ,பெரிதும் பயந்து போய் இதயம் பக் பக் என்று அடித்துக் கொள்ள ,ஒரே வேகமாக ஒடத் தொடங்கியது குஞ்சு.மெதுவாக ஓசை இன்றிச் சாது போல் ஊர்ந்து செல்லும் பாம்பின் பக்கம் ஒரு தாவில் எட்டிப் பாய்ந்து உதவி கேட்க நினைத்தது .”லபக் ”!ஒரே பாய்ச்சலில் பாம்பின் வாயினுள் முழுதாகச் சென்றுவிட்ட து தவளைக் குஞ்சு.—பாவம் !

இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டு மரத்தின் மேல் அமர்ந்திருந்த மரங்கொத்தி ,மனம் மிக நொந்து போய் ,எதிர் காலச் சந்ததியினரின் நன்மைக்காக ,அந்த மரத்தில் இரண்டு வாக்கியங்களைப் பொறித்து விட்டுப் பறந்து போனது .

 

”புறத் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாதே ”
”மின்னுவதெல்லாம் பொன்னல்ல ”
ஈழ நாடு -4.5.1986

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய