அந்திவான் அழகிதென்று பாடுவீர்நீர் அமுதநிலா உதிக்குதெனப் பாடுவீரே
சிந்துகின்ற ரத்தங்கள் தெரிவதில்லை சீஉமது கவிதைகளைக் காறித்துப்பும்
பிந்தாமல் எம்முடனே உறவுமாடிப் பெருமுதலை விழுங்குவதைப் பாடுவீரால்
இந்தளவும் நீரெமக்குச் செய்யாவிட்டால் எமக்கும்மைத் தேவையில்லை ஏகுவீரே
கண்டியிலே கொழுந்தெடுக்கும் கண்ணம்மாவின் கரத்தினிலே மூண்டுவிட்ட நெருப்புத்தானே
வண்டியினை இழுத்துலையும் வடிவேலென்பான் வாழ்க்கையையும் வருத்துவதை எழுதிப்பாரு
உண்டிதான் பல இங்கே சுருங்கும்போது உம்பேனா கவி எழுத மறுக்குமாயின்
தெண்டித்து மூடி அந்தப் பேனா தன்னை த் தெருவினிலே எறிந்துவிடும் தேவையில்லை
வங்கமா கடல் நிறைய உப்புத்தானே வந்தவழி தெரிகிறதா வாரும் சொல்ல
எங்களது வியர்வைகள்தான் ஆறாய் ஓடி இந்தமா சமுத்திரமாய் ஆனதையா
உங்களது பிள்ளைகளே அங்கே சென்று உல்லாசப் படகோட்டி ஆட்டமாடி
மங்காத நெருப்பதனை மூட்டுகின்றார் மறைப்பதற்கு ஏதுமில்லை கேட்டுக்கொள்ளும்
மலைமலையாய் நீர் குவிக்கும் பணத்தையெல்லாம் மாகடலே ஒரு நாளில் விழுங்கிக் கொள்ளும்
விலைமதிப்பே இல்லாத எம் உழைப்பு விழுமியங்கள் பலவற்றைக் காத்து நிற்கும்
கலைகளெல்லாம் எம்மடியில் வந்து வீழும் காலத்தால் மறையாது மலர்ந்து வீசும்
உலைவைப்போம் உம்கதைக்கு முடிவு வைப்போம் உண்மையிது மறைப்பதற்கு எதுவுமில்லை
சுடர் -1982