நெருஞ்சி

அம்மா அடுப்படியில் ,இருட்டில் புகை நடுவில் ,ஆனால் அவளின் அழகான கட்குழியில்

எண்ணெய் விட்டுத் திரியும் ஏற்றலாம் ,புண்ணியம் தானே செய்ததாய்ப் புலம்புவாள்

மயிர்தான் கொஞ்சம் நரைத்துப் போனாலும் பயிர்போல் தன் வாழ்வு பச்சைதான் என்கிறாள்

உயிரோடு இருக்கிறார் அப்பா என்பதால் !

அம்மா அடுப்படியில் இருட்டில் புகை நடுவில் ,அப்பா வெளியில் நிலவில் ஈஸிசெயரில்

அயல்வீட்டுப் பரமசிவம் படியில் ,மயிலு நடுவில் மறுபக்கம் மகாதேவன்

வைத்து நன்றாய் ஊர்வம்பும் அரசியலும் -சும்மா

பிய்த்து எறியும் பெரிய கருத்தரங்கம் .

 

”சாப்பிடுங்கோவன் ”-அம்மாவின் குரல் ,”போட்டுவை வாறன் ”-இது அப்பா

‘வேறென்ன வேலை சமையல் மட்டுந்தான்’ மாறின்றித் தீர்மானம் கருத்தரங்கில் நிறைவேறும்

இன்றும் நாளையும் இறந்து பிறக்கும் இரவும் பகலும் புரண்டு சரியும்

மஞ்சளும் சிவப்புமாய் (மன்னிக்கவும் குங்குமமுமாய் )அம்மா மிளிர்வாள்

கொஞ்ச நேரம் மறந்து விடுங்கள் குருதியின் நிறமும் சிவப்பு என்பதை

அம்மாவைப் பார்த்தால் மனதை ஜிவ்வுவது எடுப்பான மூக்கு

பாடம் அவளெனக்குச் சொல்லித் தருவாள் ,வீட்டுக்கு விலக்காய் இருந்ததோர் நாளில்

வீட்டுப்பாடம் விளங்கலை என்று அப்பாவைக் கேட்டேன் அவர் குரலில்

உலோகத்தன்மை எப்படி வந்தது ?”கொம்மாவுக்கு இங்கென்ன வேலை ?

பாடம் சொல்லித் தருவதுதானே ”பாய்ந்துவிட்டுப் போனார் அவரும்

மனதை ஜிவ்வும் எடுப்பான மூக்கு அசடு கலந்த அந்த இளிப்பு

அம்மாவின் மேல் ஆத்திரம் எனக்கு பின்னே என்ன ?பிசுதான் இவளுக்கு

 

இரவுநேரக் காற்று வந்து வளைந்து வீசி வீசிப் போனது

”தோய்த்துப் போட்ட உடுப்பை ஒருக்கால் பார்த்துக் கொஞ்சம் எடுத்து வாங்கோ ”

தோல் போர்த்த விறகு வேண்டுகோள் விட்டதுஈஸிசெயரோ அசையவே இல்லை

எனக்கு எவ்வளவு வேலை இங்கே உனக்கு என்ன வேலை அப்பா

உடுப்புத் தோய்ப்பது மட்டுந்தானே ?கொதிநிலை இன்னும் உயர்ந்தது எனக்குள்

மனம் ஒரு பள்ளத்தாக்குத்தானே ,ஆழம் ,அடர்த்தி ,இருட்டு ,இன்னும் –?

தாழ்ந்த சுருதியில் ஒரு தனியான மிருதுக்குரல் ,”சூழ்ந்த இடம் துப்பரவாய் இருக்கட்டன்

ஏனிந்த இடத்திலை பேப்பர் போடுறீங்கள் ?எத்தினை தரந்தான் கூட்டுறது  நானும் ”

”ஐயோ உனக்கு வேறென்ன வேலை ?கொய்யா தந்த சீதனக் காசிலை

மெய்யாப் பத்து வேலைக்காரி வைக்கலாம் ”உயர்விலை ஆடை உடுத்திடும் அம்மா

உயர்விலை ஆடையுள் உருளும் புழுப்போல் இப்போது அவள் எனக்குத் தெரிந்தாள்

அன்பு கொட்டும் அம்மாவின் குரலிப்போ ”விப்ஜியோர்” ஆகவே உடைந்து போய் நின்றது

மனிதனைத்தவிர மற்றெந்தப் பிராணியும் சோலி இன்றி இருந்ததே இல்லை

அப்பா இன்னும் ஈஸிசெயரில் பேப்பர் படிக்கிறார் கொஞ்சம் பொறுங்கள்!

அம்மாவுக்கு மூச்சு நல்லா வாங்குது சந்தை தூரம் சாமான் வாங்க

கந்தையா அண்ணை கடைக்குப் போக, கால்கள் அவளைத் தூக்கிச் செல்லும்

 

சைக்கிளில் நீங்கள் ஒரு மிதி மிதித்தால் சுருக்காய் வரலாம் என்று நான் சொன்னேன்

‘அம்மா போகட்டும் பார்த்து வாங்குவாள் சந்தைக்குப் போவது மட்டுந்தானே ?

மிகுதி எல்லாம் நானே செய்வேன் ‘அப்பா போட்ட முகமூடி மிக நீளம்

 

அண்ட வெளியின் பெரிய சங்கீதம் அதுதான் அம்மா அதுதான் அம்மா

அந்தத் துளசி அதன் மீது கவியும் இருளில் என்ன பெற்றுக் கொள்ளும்?

விலக்கவில்லை இருளை அதுவும் விடியுந்தானே என்ற நினைப்போ ?

என்ன நினைவு ?என்ன நினைவு ?எண்ணி எண்ணி மார்பு புண்ணாகும்

காற்றுக்கு மூச்சேன் நின்று போச்சு ?இலைகள் ஏன்தான் அசையவில்லை

அம்மா உண்மையில் அழகிய புஸ்பம் ,மாண்டில் திரிபோல் என்று வைப்பம் .

 

(1993)

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: webadmin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய